கடந்த நாளில் காதலில் மாய்ந்த ஒரு நண்பனின் காதல் கதையைத் திரும்பிப் பார்க்க நேர்ந்தது. காதலில் என்ன..?? தினசரி நாம் பார்க்கும் பல விதமான போராட்டங்களை விடப் பெரியதா..?? நிச்சயம் இல்லைதான். ஆனால் சுதந்திரம் பற்றி எழுதிய மகாகவி பாரதியாரும் “அச்சமில்லை.. அச்சமில்லை” என்று பாடிய நேரத்தில்தான், “காற்று வெளியிடைக் கண்ணம்மா, நின்தன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்” என்றும் காதல் மொழி பாடினார். சாதாரணமாகக் கடந்து போக முடியாத ஓர் உணர்வும், ஒரு மனிதனை மாமனிதனாகவும், மிருகமாகவும், கலைஞராகவும், கவிஞராகவும், அறிஞராகவும், ஏன் மனநிலை மாற்றம் கூடச் செய்ய வைக்கும் அதீத சக்தி காதலுக்கு உண்டு.

ஆனால் வேறுபாடுகள் இல்லாமல் வரும் காதல் எல்லாருக்கும் கைகூடும் விதத்தில் வேறுபடுகிறது. எல்லாவற்றிலிருந்தும் தப்பிப் பிழைத்து இன்பம் மட்டும் கண்டு வாழும் காதல்கள் இன்றும் விரல் விட்டு எண்ணும் அளவுதான். தோனி சென்ற பின் சப்போர்ட் இல்லாமல் தத்தளிக்கும் CSK நிலைதான் பல காதல்களின் கதை. பெற்றோர் துணையும் இல்லை, சமூகத்தின் துணையும் இல்லை, இவை எல்லாம் அமைந்தாலும் புரிதல்களின் வேறுபாடுகள் காரணமாகப் பிரிவைப் பரிசாக்கும் காதல்கள் ஏராளம்.

இது இன்று மட்டும்தானா..?? இல்லை. இதயங்களில் காதல் பூ பூக்கும் முன்னே, அதில் முளைத்த வெற்று கௌரவ விஷச் செடிகள் ஆண்டு ஆண்டுக் காலமாக மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன.

“சரிடா, எப்பத்தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுவ” என்று நீங்கள் பேசும் வசனம் கேட்கிறது. நோய் என்ன என்று கூறினாலே அதன் வைத்தியம் புரியும். மேலே கூறிய அந்த விஷச் செடிகளின் விஷம் தாக்கி அதில் காதலைத் தொலைத்த ஒருவனே என் நண்பனும். காதல் வளர்த்த அவனிடம் வறுமையும் நன்கு வளர்ந்திருந்தது. வறுமை ஒன்றும் அவனின் தவறில்லை. நிச்சயம் என்றாவது ஒருநாள் மாறும் ஒன்றுதான் அது. ஆனால் கௌரவத்தால் கட்டப்படும் கோட்டைகள் எளிதில் உடைவதில்லை. காரணம், கௌரவங்கள் என்றும் நம்மைச் சான்றோரின் மனநிலையைத் தேட வைப்பதில்லை. அது என்றும் சுற்றியுள்ள மனிதர்களின் புறணிகளுக்கு மட்டுமே மதிப்பளிக்கும். இப்படி அடுத்தவர்களின் சிந்தனை பழுதாகி விடக் கூடாது என இரு உள்ளங்களை உடைத்துவிட்டனர்.

நண்பன் இங்கே செய்த தவறு, தனக்கு ஒன்று இல்லை என்றானவுடன் அதைக் கடந்து செல்ல முடியாமல் போனது. தன்னைப் பிரிந்த காதலியை நினைத்துத் தினம் தினம் கவிதை எழுதிய அவன், அந்த முடிவு வேறு யாருக்கும் நிகழாமல் பார்க்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கலாம். அதற்கான வேலைகளைத் தன் எழுத்தின் மூலமாகக் கொண்டு சென்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம், தன் அடையாளத்தை மாற்றியிருக்கலாம். பேரறிஞனாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவன் தன்னிலை மறந்து போனான். கடைசியில் இல்லாமலும் போனான்.

முன்பு கூறியது போல் காதல் ஒரு ஜீவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும். ஆனால் என்னவாக மாற வேண்டும் என்பது அந்த ஜீவனிடமே உள்ளது. காதலிக்கும் ஒவ்வொரு நொடியும் இன்பமாகக் காதலியுங்கள், அதை ஆத்மார்த்தமாக உணருங்கள். கைகூடுமோ, கூடாதோ என்ற எண்ணமே காதலின் ரசனையைக் குறைத்துவிடும். கூடினால் நன்மை; இல்லையா, அந்த வலியை எடுத்து உரமாக்கி உங்களை உயர்த்துங்கள். பிரிந்தவர்களைப் புறம் பேசாமல், தரம் தாழ்த்தாமல், நம் மனிதத்தை மறந்து மிருகமாகி அவர்களை அழிக்காமல், தானும் அழியாமல், உடன் இருந்த நல்ல நினைவுகளுக்கு மதிப்பளித்து இன்புற்றிருங்கள்.

காதலியுங்கள்.. காயங்கள் ஆற, வேறுபாடுகள் மாற.. மனிதம் சேர..!!

-வருண்